Thursday, March 1, 2012

தும்பை..

 


இதுதான் தும்பைச்செடி! மழைக் காலங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பசுமையாகக் காட்சிதரும்.

இதன் பூவை வெண்மைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். சுத்தமாக நரைத்துப்போன தலைகளைத் தும்பைப் பூவைப்போல் நரைத்திருப்பதாகச் சொல்வார்கள். (என்னை இன்னும் அப்படி யாரும் இதுவரை சொல்லவில்லை)

தும்பைச் செடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டும் மிருதுவானவை. தும்பைப் பூவில் தேன் உறுஞ்ச வண்ண வண்ணமாக வண்ணத்துப் பூச்சிகள் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மிருதுவான தும்பைச் செடிகளைக் கொத்தாகப் பிடுங்கி அதைக் கொண்டே வலிக்காமல் வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவோம்.

தும்பைச் செடிக்குப் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்கிறேன். 

தும்பை, துளசி, இவற்றின் சாரெடுத்து மிளகைத் தூளாக்கி அதையும் சேர்த்து இவை மூன்றையும் கொண்ட கலவையுடன் சிறுவர்களின் சிறுநீர் கொஞ்சம் கலந்து நசியம் என்னும் மருந்து தயாரிப்பார்கள். அதை ஏதோ ஒரு நோய்க்காக எருமையின் மூக்கில் விடுவார்கள். 

இதற்குப் பயந்துகொண்டே எங்கள்வீட்டுப்பக்கம் இருந்த ஒரு தாத்தாவைக் கண்டால் சிறுவர்கள் ஓடிவிடுவார்கள்.

இப்போதும் தும்பைச்செடி மழைக் காலங்களில் காலி இடங்களில் வளருகிறது. ஆனால் அதை நாடிவரும் வண்ணத்துப் பூச்சிகளைத்தான் முன்போல் காணோம். 

நசியம் விடும் தாத்தாக்களையும் காணோம். நினைவுகள்மட்டும் பசுமையாக உள்ளது.

No comments:

Post a Comment