Wednesday, February 29, 2012

மண்பானை.!




இதுதான் இன்று வீடுகளில் புழக்கத்தில் இல்லாத மண்பானை.

இதைக் கிராமங்களில் தாளி, மொடா என்றும் சொல்வார்கள்.

மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம். 

முற்காலத்தில் இந்தப் பானை பலவழிகளில் வாழ்வில் பயன்பட்டு வந்தது.

தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது.

விசே சகாலங்களில் அதிகம்பேருக்கு ஒரே நேரத்தில் சமைக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் குளிப்பதற்கு வெந்நீர் வைக்க இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் பயன்படும்.

ஏன், எனது அனுபவத்தில் கூட பொங்கல் சமயத்தில் சுட்டுப் பானையில் அடுக்கிவைத்த முருக்கையும் எள்ளுருண்டையையும் எடுக்கமுயன்று தள்ளிவிட்டு உடைத்த காலங்கள் பசுமையானவை. 

வீட்டுக்குள் எட்டாதவற்றை எடுக்க ஸ்டூலாகவும் இது பயன்பட்டது.

அந்தக்காலத்தில் பணக்காரர்கள் பொன்னையும் பொருளையும் பானைகளில்போட்டு நிலத்தில் புதைத்துவைத்ததும் உண்டு. இன்றும் புதையல்களாக பலஇடங்களில் கிடைக்கிறது.

இறந்தவர்களைப் புதைக்க சவப்பெட்டிகளாகவும் பயன்படுத்தினார்கள். அதைத்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் முதுமக்கள் தாளிகள் என்று சொல்கிறார்கள்

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். 

அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்துப் மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது. 

திருவிழாக் காலங்களில் நீர்மோரும் பானகமும் மண்பானைகளில் வைத்து வழங்கப்பட்டன.

ஆதியிலிருந்து இன்று வரை கள்ளு ஊற்றிவைக்க மன்பானைகள்தான் புழக்கத்தில் உள்ளன.(அதுதான் இன்றுவரைநீடிக்கிறது)

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த இது இன்று புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. 

ஆனால் இன்றும் நகரங்களில்கூட குடிதண்ணீர் மண்பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்பட்டாலும் அதற்கேற்ற சுத்தமான குடிநீர் அறிதாகிவருவதால் நவீன சாதனங்களின்மூலம் சுத்திகரிக்கப்படும் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

அதன் காரணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டினால் சுற்றுச் சூழல் பிரச்சினை அதிகரித்து வருவதோடு குடிதண்ணீர்கூட வர்த்தகப் பொருளாகி விற்பனைக்கு வந்துவிட்டதுதான் சோகமான விஷயம்!

நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்!....

No comments:

Post a Comment