Wednesday, March 14, 2012

உடல் பருமன் குறைய வேண்டுமா?


தேவையான பொருட்கள்:
  1. முள்ளங்கி.
  2. தேன்.
செய்முறை:
முள்ளங்கியை துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

Friday, March 9, 2012

பழைய சோறு.!




வெய்யில் காலம் துவங்கிவிட்டது. இனி ஆளுக்கு ஆள் பேச்சுத் துவங்குவதே வெயிலைப்பற்றித்தான் இருக்கும்.

மின்சாரமும் பழிவாங்குவதால் இந்தக் கோடை ஒரு சோதனையான காலமாகத்தான் இருக்கப்போகிறது.

இந்த நேரத்தில் வழக்கொழிந்து வருகிற பழையசோற்றின் சிறப்புப் பற்றிச் சொல்லப் போகிறேன்.

அரிசி, கம்பு, சோளம், தினை, சாமை, ராகி போன்ற தானியங்களால் சமைக்கப்படும் சோற்றைக் கொண்டோ களியைக் கொண்டோ பழைய சோறு தயாரிக்கலாம்.

குறிப்பாக அரிசியும் கம்பும் சோளமும் எளிதில் கிடைக்கக்கூடியவை.

பழைய சோறு என்பது அதற்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கபடுவது அல்ல. சூடாக உண்பதற்காகத் தயாரிக்கப்படும் சாதம் அல்லது களியை உண்டுவிட்டு மீதம் இருப்பது ஆறியபின்பு அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டால் சுமார் ஆறுமணிநேரத்துக்குப் பின்னால் பழைய சோறு தயார். அதை மேலும் ஒரு நாள் வரை வைத்திருந்து போதுமான அளவு சோறும் அதிலுள்ள நீரும் சிறிது உப்பும் சேர்த்து பழைய சோற்றுக்கலவையை உண்பதற்குத் தயார் செய்துவிடலாம்.

பொதுவாகப் பழைய சோற்றைக் கையால் பிசைந்து கரைத்தால்தான் நன்கு கூழ்பாகத்தில் உண்பதற்கு நன்கு இருக்கும். கரண்டியால் கலக்கினால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பருக்கை பருக்கையாக இருக்கும். 

சமைப்பது மண் சட்டியாக இல்லாமல் வேறு பாத்திரமாக இருந்தாலும் அதைப் பழைய சோற்றுக்காக எடுத்துவைக்கும்போது மண் சட்டியில் வைத்துத் தண்ணீர் ஊற்றிவைப்பதுதான் சிறந்தது. காரணம் அது கூடுதல் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மண் சட்டி இல்லாவிட்டால் மற்ற பாத்திரங்களிலும் வைக்கலாம்.

பழைய சோற்றில் மோரோ தயிரோ கலந்துகொள்வது மேலும் சுவையை அதிகப்படுத்தும். அதனுடன் சின்னவெங்காயத்தை சின்னதாக நறுக்கிப் போட்டோ அல்லது நேரடியாய்க் கடித்துக்கொண்டோ பழைய சோறு சாப்பட்டால் இன்னும் சுவை கூடுதல் ஆகும். முன்பெல்லாம் பச்சைமிளகாயைக் கடித்துக் கொண்டும் பழைய சோறு உண்பார்கள்.

பழைய சோறு தண்ணீர் ஊற்றிவைத்த ஆறில் இருந்து பன்னிரண்டு மணிநேரத்துக்குப் பின்னால் அதை முறைப்படி உப்பும் இருந்தால் மோரோ தயிரோ கலந்து கலக்கிக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் போதுமான நேரத்துக்குப்பின்னால் சாப்பிட்டால் அதன்சுவையை வர்ணிக்கவே முடியாது.

இது அந்தக்காலத்தில் ஏழை மக்களின் மலிவான உணவாகும். 

சமைத்த உணவைவிட இது கூடுதல் சத்துக்களைக் கொண்டது. எளிதில் செரிக்கக்கூடியது. இயற்கை உணவுக்கு நிகரானது. 

அந்தக் காலத்தில் கடுமையாக உழைக்கும் ஏழைகளும் உழைப்பாளிகளும் விவசாயிகளும் பழைய சோறுதான் சாப்பிட்டு வாழ்ந்தார்கள் என்றால் அதன் சிறப்பை நன்கு உணரலாம்!

அந்தக் காலத்தில் காலை உணவு உண்ணும் நேரத்தைப் பழைய சோத்து நேரம் என்றுதான் கிராமங்களில் சொல்வார்கள்.

பழைய சோற்று வகைகளிலேயே கம்புதான் மிகுந்த மணத்துடனும் சுவையுடனும் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் கம்மங்கூழ் பானைகளில் வைத்து தெருவோரங்களில் கூட விற்றபனை செய்யப்படுகிறது.

பழைய சோற்றில் உள்ள சிறப்புகளைத் தனிக் கட்டுரையில் விளக்குவதுதூன் சிறப்பாக இருக்கும். அது ஒருவகையில் மருத்துவகுணமும் இயற்கைத் தன்மையும் கொண்டதாக இருப்பதால் சமைக்கப்படும் எந்த ஒரு உயர்ந்த வகை உணவை விடவும் ஒப்பு நோக்கில் உடல் நலனுக்கு ஏற்றதும் மிகவும் செலவு குறைந்ததும் ஆகும்.

மற்ற உணவை உண்டால் தாகம் எடுக்கும். ஆனால் பழைய சோறு உண்டால் தாகத்தைப் போக்கும்.

பழைய சோற்றை மறக்கவேண்டாமே!

Thursday, March 8, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 02.


இஞ்சி.!



இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேனில் ஊற வைத்து தினமும் இரண்டு துண்டுகள் (ஒரு விரைகடை அளவு) உணவிற்கு முன் உண்டு வர பசியின்மை, செரியாமை, வயிற்று பொருமல் ஆகியவை தீரும்.


அருகம்புல்.!





அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி ஒரு கைப்பிடி எடுத்து பத்து மிளகாய் சேர்த்து நான்கு தம்ளர் நீரை ஊற்றி ஒரு தம்ளராக வற்ற வைத்து வடித்து இளம் சூட்டில் பனங் கல்கண்டு சேர்த்து தினம் இரு வேளை பருகி வர இரத்தம் சுத்தமாகும் . உடல் அரிப்பு வேர்வை நாத்தம் வெள்ளை ஆகியவை தீரும் .


அவுரி.!



அவுரி வேரபட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நன்கு டம்பளர் நீரை ஒரு டம்பளரக சுண்ட காய்ச்சி தினம் இரு வேளை 
பருகி வர , காணாக் கடி ஒவ்வாமை, தோல் நோய்கள் சில விடங்கள் ஆகியவை தீரும். 

Wednesday, March 7, 2012

நலம் நல்கும் மூலிகைகள்.. பகுதி 01.


மணத்தக்காளி.!



மணத்தக்காளி என்பது பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கீரை வகை (மூலிகை வகை) ஆகும்.  மணத்தக்காளி இலைகளை நன்றாக கழுவி விட்டு நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், குடல் புண், ஆகியவை தீரும். மேலும் அனைத்து வீடுகளிலும் இதை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்பார்கள். வாரம் ஒரு முறையாவது உணவில் மணத்தக்காளி இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். நாம் மணத்தக்காளி இலைகளை நேரடியாக கழுகி விட்டு உண்ணலாம்.

முடக்கறுத்தான்.!





முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம்  ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம்.  இது மூட்டு வலி , முடக்கு வாதம் ,  கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.


வல்லாரை.!



வல்லாரை என்பது அனைவரும் அறிந்த , ஆனால் அதிகம் பேர் உபயோகபடுத்தாத அற்புதமான மூலிகை ஆகும். இதன் தாவரவியல் பெயர் centella asiatica ஆகும். இது பொதுவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.  கீரையாகவும் கட்டி விற்குமிடத்தில் கிடைக்கும். இதை சமைத்தும் உண்ணலாம். இதன் இலைகளை நிழலில் காய வைத்து பொடியாக செய்து வைத்து கொண்டு ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை குழந்தைகளுக்கும் , பெரியவர்களுக்கும் கொடுத்து வர ஞாபக சக்தி , அறிவு கூர்மை அதிகரிக்கும். நம்மிடையே கிடைக்கும் அற்புதமான மூலிகை , அனைவரும் பயன்படுத்த வேண்டுகிறேன்..


Tuesday, March 6, 2012

ஓணான்.!!



வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்வர்கள். அந்த அளவு கிராமத்து வேலிகளுக்கும் இந்த ஓணான்களுக்கும் அவ்வளவு நெருக்கம் ஆகும்.

ஓணான் பற்றிக் கிராமத்தில் உள்ளவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அனைவருக்கும் தெரியும். அவற்றில் பலவகைகள் உள்ளன. பச்சோந்தி என்பதுவும் ஒரு வகை ஓணான் என்று சொல்வார்கள்.

இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கிக்கொண்டு திரிவதைப்போல் அந்தக் கால கிராமச் சிறுவர்கள் இந்த ஓணான்களை வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்காகும். சரியாகக் குறிவைத்து அடிப்பதற்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.

முக்கியமாகக் கள்ளிகளில் தான் நிறைய ஓணான்களைப் பார்க்கமுடியும். இவற்றால் மனிதருக்கோ விவசாயப் பயிர்களுக்கோ பெரிய அளவு தீங்கு என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஆனால் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக எண்ணற்ற ஓணான்கள் பலியாகும். ஆனால் தற்காலத்தில் அப்படிப்பட்ட விளையாட்டு எந்தச் சிறுவர்களுக்கும் அனேகமாகத் தெரியாது. அதனால் ஓணான்களுக்குப் பாம்புகளைத்தவிர வேறு ஆபத்து ஒன்றுமில்லை.

ஆனால் அவற்றின் வாழ்விடங்களான வேலிகள் அழிக்கப்பட்டு வருவதால் கிராமப்புறங்களில்கூட அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஓணான்களுக்கு இரையாகின்ற பலவகைப் பூச்சி இனங்கள் அழிக்கப்படுவதும் ஓணான்கள் வாழ்வுக்குப் பெரும் சோதனை ஆகும்.

Monday, March 5, 2012

பயங்கர(மறதி)வாதி.!





சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பர்களுமாக ஐந்துபேர் ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தோம்.

அப்போது டெல்லியில் நாடாளு மன்றத்தையும் பார்க்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசுக் கடிதத்துடன் சென்றிருந்தோம். அப்போதுதான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து ஒருவருடம் ஆகியிருந்தது.

கடிதத்தைக் காட்டி அனுமதிக்காக வரவேற்பறையில் காத்திருந்தோம். அந்த வரவேற்பறையில் சுற்றிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தவிரவும் அங்கிருந்து உள்ளே செல்லும் நுழைவாயிலில் பைபர் கிளாஸில் செய்ப்பட்ட உறுதியான தடுப்பு இருந்தது. அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். நாம் அருகில் சென்றவுடன் அங்கே மேடைபோல் உள்ள ஒருஸ்கேனிங் மெஷின் மேல் நமது பையை வைக்கவேண்டும். நம்மிடமோ பையிலோ ஆயுதங்கள் ஏதும் இல்லாவிட்டால் அந்தத் தடுப்புக் கதவு திறக்கும். ஏதாவது இருந்தால் அந்த ஸ்கேனிங் மெஷின் காட்டிக் கொடுத்துவிடும். மாட்டிக்கொள்வோம்.

அனுமதி கிடைத்தவுடன் அந்தத் தடுப்புக்கருகில் வரிசையாக நின்றோம். அப்போதுதான் பகீரென்று எனது கைப்பையில் கத்தி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. உயிரே போனதுமாதிரி ஆகிவிட்டது. நான் எப்போதும் வெளியூர் சென்றால் பழம் அறுப்பதற்காகவும் தற்காப்புக்காகவும் நல்ல உறுதியான கத்தி ஒன்றைப் பையில் வைத்திருப்பது பழக்கம். ஆனால் இப்படியொரு சிக்கலான நிலைமை வரும் என்று யார் கண்டார்கள்?


எதுவும் செய்வதற்கோ வெளியில் போவதற்கோகூட வழியோ நேரமோ இல்லை. யாருக்கும் தெரியாமல் அலுங்காமல் வெளியே எடுத்து அங்கிருக்கும் சோபாவுக்கடியில் சொருகிவிட்டுப் போய்விட்டால் என்ன என்று ஒரு வினாடி நினைத்தேன். ஐயோ! கண்காணிப்புக் காமிராவில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துப்பாக்கியுடன் அல்லவா நுழைவார்கள்? என்ன செய்வது! ஒரே பதட்டம்!

எப்படியோ ஆகட்டும். நாம் உண்மையைச் சொல்வோம். அதற்குப் பின்னால் நடப்பதை நம் வாழ்வில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! தூக்கிலா போட்டுவிடப் போகிறார்கள் என்று மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு நுழைந்தேன். இதயம் வேகமாகத் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

என்ன அதிசயம்! எந்த அலாரமும் அடிக்கவில்லை, எந்த மெஷினும் என்னைக் காட்டிக்கொடுக்கவில்லை! நாடாளுமன்றத்திற்கு உள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். அங்கே மறந்துபோய் வைத்துவிட்டுப்போன கத்தி என்னைப் பார்த்துச் சிரித்தது.

Sunday, March 4, 2012

இரவு வானம்.!!




இரவு வானில் விண்மீன்களையும் கோள்களையும் ராசிகளையும் கண்டு கழிக்க விரும்பும் நண்பர்களே! 

இரவு வானின் வரைபடத்தை வைத்து எப்படி அடையாளம் காண்பது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளபடியே கற்றுக்கொள்ளமுடியும்.

இரவில் வெளிச்சமோ தூசோ உயரமான மரங்களோ குன்றுகளோ இல்லாத தூய்மையான தனியான இடந்தான் அதற்குச் சரியான இடம்.

இல்லாவிட்டால் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றைக் காண முடியாது. 

அத்தகைய ஒரு இடத்தில் மொட்டை மாடியாக இருந்தாலும் சரி, வயல்வெளியாக இருந்தாலும் சரி கட்டிலில் அல்லது தரையில் வடக்குநோக்கித் தலையை வைத்துப் படுதுக்கொள்ளவேண்டும்.மேப்பை நமது முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டு டார்ச் விளக்கின் உதவியால் பார்த்து அதே வடிவத்தில் விண்ணில் தெரியும் காட்சியைச் சரியாகக் கண்டுபிடிக்கப் பழகவேண்டும். அது மிக எளிமையானதுதான்.

நின்றுகொண்டே பார்க்க விரும்பினால் தெற்குமுகமாக நின்றுகொண்டு வானை அண்ணாந்து பார்க்கவேண்டும் . 

பழகிவிட்டால் அதன் பின் மேப்பைப் பார்த்தாலே வானில் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் புரிந்து விடும்.

Saturday, March 3, 2012

பொன்வண்டு..!!




இதுதான் பொன் வண்டு. கொங்கு நாட்டில் இதைப் பொன்னாம்பூச்சி என்று சொல்வார்கள். பசுமைநிறத்துடன் பலாக்கொட்டை அளவில் இருக்கும். மற்றொரு இனம் உடல் சிவப்பாகவும் தலைமட்டும் பசுமையாகவும் உருவத்தில் பெரியதாகவும் இருக்கும். இதை மலைப் பொன்னாம் பூச்சி என்பார்கள்.

பூச்சி இனங்களிலேயே அருவருப்பு இல்லாமல் சர்வசாதாரணமாகப் பிடித்து விளையாடக்கூடியது இந்தப் பொன்வண்டு.

அதைத் திருப்பி மல்லாக்கப் போட்டுவிட்டால் இறக்கைகளை அடித்து ரீங்காரமிட்டபடி குட்டிக்கரணம்போட்டு சமநிலைக்கு வருவது பார்க்க அழகாக இருக்கும்.

நான் சிறுவயதில் மழைக்காலங்களில் இவற்றைப்பிடித்துத் தீப்பெட்டிகளில் அடைத்துவைத்து விளையாடுவேன். முட்டைகள்கூட வைக்கும்.

இவை பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வெள்வேல் மரங்களில் அதன் இலைகளைத் தின்று வாழும்.

ஆனால் சமீப காலங்களில் இது கண்ணில் காண்பதே அரிதாகிவிட்டது. எனது பேரனுக்கு விளையாடக் கொடுப்பதற்காக வெள்வேல மரங்களில் தேடிப் பார்த்துக் கிடைக்காமல் இப்போது அந்த முயற்சியைக்கூடக் கைவிட்டுவிட்டேன். 

ரசாயன உரங்ளையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தத் துவங்கியபின்பு நாம் இழந்துவரும் உயிரினங்களில் இந்தப் பொன்வண்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்! யாரேனும் பார்த்திருந்தால் சொல்லுங்கள் காதிலாவது கேட்டுக்கொள்கிறேன்!.....

Friday, March 2, 2012

ஓலைச் சுவடி!




முற்காலத்திலிருந்து சமீபகாலம் வரை காகிதம் கண்டுபிடிக்கப்படும் வரை கல்வி சம்பந்தமான அனைத்துப் பயன்பாட்டுக்கும் பனையோலைச் சுவடிகள்தான் பயன்பாட்டில் இருந்தன.

இன்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் சங்க இலக்கியங்களும் சித்தர் பாடல்களும் கம்ப ராமாயணமம் திருக்குறளும் எல்லாம் இந்தப் பனையோலைச் சுவடிகளில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தங்களை இருப்பாகக் கொண்டிருந்தன.

பனை பலவகையிலும் நமது வாழ்வாதாரமாகமட்டுமல்ல கல்வி, பண்பாடு. கலை இலக்கியத்துக்கும் ஆதாரத் தூணாக இருந்தது.

பனையும் நம் தாய்த் தமிழ் மொழியும் இணைபிரியாத இரட்டையர்கள்.

அந்தோ பரிதாபம்! காகிதம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பனைமரத்தின் பாரம்பரியத்தை மறந்தோம்.

பெற்றோர் மறைந்தாலும் அவர்களின் உருவப்படங்களைப் புனிமாகக் கருதி மதிக்கிறோம். ஆனால் அதற்கு ஈடாக மதிக்கவேண்டிய பனையைமட்டும் நன்றி கொன்றதனமாக மறந்துவிட்டோம்.

என் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மையைச் சொன்னால் இதற்குப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு கொலை வழக்குக்காக சம்பவ இடத்துக்குச்சென்ற காவலர்களுக்கு அங்கிருந்த வேலையாள் மரமேறி இளநீர்குலையைத் தள்ளி அவர்களுக்குச் சீவிக்கொடுத்து அவர்கள் குடித்தபின் அதனுள் இருந்த வழுக்கையை எல்லாம் வழித்துக் கொடுத்து உண்டு இளைப்பாறியபின்பு என்ன செய்தார்கள் தெரியுமா?

அந்த அப்பாவி மனிதரை அங்கிருந்த ஒரு தடியை எடுத்து அடித்து உதைத்து அவரையும் ஒரு எதிரியாக வழக்கில் சேர்த்து ஆயுள்தண்டனையம் வாங்கிக் கொடுத்தார்கள். 

அதுபோன்று பலவகையிலும் பனை நமக்குப் பயன்பட்டதையும் மறந்து துரோகத்தனமாக வெட்டி சூளையில் போட்டு எரித்துக்கொண்டு உள்ளோம்.

கொடுமை! கொடுமை!

Thursday, March 1, 2012

தும்பை..

 


இதுதான் தும்பைச்செடி! மழைக் காலங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பசுமையாகக் காட்சிதரும்.

இதன் பூவை வெண்மைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். சுத்தமாக நரைத்துப்போன தலைகளைத் தும்பைப் பூவைப்போல் நரைத்திருப்பதாகச் சொல்வார்கள். (என்னை இன்னும் அப்படி யாரும் இதுவரை சொல்லவில்லை)

தும்பைச் செடிக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டும் மிருதுவானவை. தும்பைப் பூவில் தேன் உறுஞ்ச வண்ண வண்ணமாக வண்ணத்துப் பூச்சிகள் பறப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மிருதுவான தும்பைச் செடிகளைக் கொத்தாகப் பிடுங்கி அதைக் கொண்டே வலிக்காமல் வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து விளையாடுவோம்.

தும்பைச் செடிக்குப் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. எனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்கிறேன். 

தும்பை, துளசி, இவற்றின் சாரெடுத்து மிளகைத் தூளாக்கி அதையும் சேர்த்து இவை மூன்றையும் கொண்ட கலவையுடன் சிறுவர்களின் சிறுநீர் கொஞ்சம் கலந்து நசியம் என்னும் மருந்து தயாரிப்பார்கள். அதை ஏதோ ஒரு நோய்க்காக எருமையின் மூக்கில் விடுவார்கள். 

இதற்குப் பயந்துகொண்டே எங்கள்வீட்டுப்பக்கம் இருந்த ஒரு தாத்தாவைக் கண்டால் சிறுவர்கள் ஓடிவிடுவார்கள்.

இப்போதும் தும்பைச்செடி மழைக் காலங்களில் காலி இடங்களில் வளருகிறது. ஆனால் அதை நாடிவரும் வண்ணத்துப் பூச்சிகளைத்தான் முன்போல் காணோம். 

நசியம் விடும் தாத்தாக்களையும் காணோம். நினைவுகள்மட்டும் பசுமையாக உள்ளது.