Tuesday, March 6, 2012

ஓணான்.!!



வேலிக்கு ஓணான் சாட்சி என்று சொல்வர்கள். அந்த அளவு கிராமத்து வேலிகளுக்கும் இந்த ஓணான்களுக்கும் அவ்வளவு நெருக்கம் ஆகும்.

ஓணான் பற்றிக் கிராமத்தில் உள்ளவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் அனைவருக்கும் தெரியும். அவற்றில் பலவகைகள் உள்ளன. பச்சோந்தி என்பதுவும் ஒரு வகை ஓணான் என்று சொல்வார்கள்.

இப்போது சிறுவர்கள் கிரிக்கெட் மட்டைகளைத் தூக்கிக்கொண்டு திரிவதைப்போல் அந்தக் கால கிராமச் சிறுவர்கள் இந்த ஓணான்களை வேட்டையாடுவது ஒரு பொழுதுபோக்காகும். சரியாகக் குறிவைத்து அடிப்பதற்கு இதன் மூலம் பயிற்சி கிடைக்கும்.

முக்கியமாகக் கள்ளிகளில் தான் நிறைய ஓணான்களைப் பார்க்கமுடியும். இவற்றால் மனிதருக்கோ விவசாயப் பயிர்களுக்கோ பெரிய அளவு தீங்கு என்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஆனால் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக எண்ணற்ற ஓணான்கள் பலியாகும். ஆனால் தற்காலத்தில் அப்படிப்பட்ட விளையாட்டு எந்தச் சிறுவர்களுக்கும் அனேகமாகத் தெரியாது. அதனால் ஓணான்களுக்குப் பாம்புகளைத்தவிர வேறு ஆபத்து ஒன்றுமில்லை.

ஆனால் அவற்றின் வாழ்விடங்களான வேலிகள் அழிக்கப்பட்டு வருவதால் கிராமப்புறங்களில்கூட அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டன. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஓணான்களுக்கு இரையாகின்ற பலவகைப் பூச்சி இனங்கள் அழிக்கப்படுவதும் ஓணான்கள் வாழ்வுக்குப் பெரும் சோதனை ஆகும்.

No comments:

Post a Comment