Monday, March 5, 2012

பயங்கர(மறதி)வாதி.!





சில வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பர்களுமாக ஐந்துபேர் ஜெய்ப்பூர், ஆமதாபாத், டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தோம்.

அப்போது டெல்லியில் நாடாளு மன்றத்தையும் பார்க்க ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசுக் கடிதத்துடன் சென்றிருந்தோம். அப்போதுதான் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து ஒருவருடம் ஆகியிருந்தது.

கடிதத்தைக் காட்டி அனுமதிக்காக வரவேற்பறையில் காத்திருந்தோம். அந்த வரவேற்பறையில் சுற்றிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தவிரவும் அங்கிருந்து உள்ளே செல்லும் நுழைவாயிலில் பைபர் கிளாஸில் செய்ப்பட்ட உறுதியான தடுப்பு இருந்தது. அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். நாம் அருகில் சென்றவுடன் அங்கே மேடைபோல் உள்ள ஒருஸ்கேனிங் மெஷின் மேல் நமது பையை வைக்கவேண்டும். நம்மிடமோ பையிலோ ஆயுதங்கள் ஏதும் இல்லாவிட்டால் அந்தத் தடுப்புக் கதவு திறக்கும். ஏதாவது இருந்தால் அந்த ஸ்கேனிங் மெஷின் காட்டிக் கொடுத்துவிடும். மாட்டிக்கொள்வோம்.

அனுமதி கிடைத்தவுடன் அந்தத் தடுப்புக்கருகில் வரிசையாக நின்றோம். அப்போதுதான் பகீரென்று எனது கைப்பையில் கத்தி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. உயிரே போனதுமாதிரி ஆகிவிட்டது. நான் எப்போதும் வெளியூர் சென்றால் பழம் அறுப்பதற்காகவும் தற்காப்புக்காகவும் நல்ல உறுதியான கத்தி ஒன்றைப் பையில் வைத்திருப்பது பழக்கம். ஆனால் இப்படியொரு சிக்கலான நிலைமை வரும் என்று யார் கண்டார்கள்?


எதுவும் செய்வதற்கோ வெளியில் போவதற்கோகூட வழியோ நேரமோ இல்லை. யாருக்கும் தெரியாமல் அலுங்காமல் வெளியே எடுத்து அங்கிருக்கும் சோபாவுக்கடியில் சொருகிவிட்டுப் போய்விட்டால் என்ன என்று ஒரு வினாடி நினைத்தேன். ஐயோ! கண்காணிப்புக் காமிராவில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துப்பாக்கியுடன் அல்லவா நுழைவார்கள்? என்ன செய்வது! ஒரே பதட்டம்!

எப்படியோ ஆகட்டும். நாம் உண்மையைச் சொல்வோம். அதற்குப் பின்னால் நடப்பதை நம் வாழ்வில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! தூக்கிலா போட்டுவிடப் போகிறார்கள் என்று மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு நுழைந்தேன். இதயம் வேகமாகத் துடிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

என்ன அதிசயம்! எந்த அலாரமும் அடிக்கவில்லை, எந்த மெஷினும் என்னைக் காட்டிக்கொடுக்கவில்லை! நாடாளுமன்றத்திற்கு உள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினோம். அங்கே மறந்துபோய் வைத்துவிட்டுப்போன கத்தி என்னைப் பார்த்துச் சிரித்தது.

No comments:

Post a Comment